உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. ஏழு நகராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட எந்த திட்டங்களையும் இதுவரை வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் நிறைவேற்ற வில்லை என கூறப்படுகிறது. அதற்கான முயற்சிகளும் எடுக்கவில்லை என்பதால், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து கொடுக்காததால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கியாக மட்டுமே போலி வாக்குறுதிகளை கொடுக்கின்றனர் என்றும் எந்த திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்து, அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்தி வினோத பிரச்சாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
– இரா.நம்பிராஜன்








