பீகார் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்

பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி அரசு மீண்டும் அமைந்துள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சராக 8வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.  பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று பாஜக, ஐக்கிய ஜனதா தளம்,…

பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி அரசு மீண்டும் அமைந்துள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சராக 8வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார். 

பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று பாஜக, ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடைபெற்று வந்த நிலையில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.

நேற்று காலையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ்குமார் வழங்கினார். இதையடுத்து ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியில் மீண்டும் இணைந்தார் நிதிஷ்குமார்.

நிதிஷ்குமார் தலைமையில் புதிய அரசு அமைக்க மகாகத் பந்தன் கூட்டணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்கக் உரிமை கூறினார். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார். ஆளுநர் பாகு சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகாரில் அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டுக்கொடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக இன்று பதவியேற்றார்.

பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றுள்ள ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், அம்மாநிலத்தில் நீண்டகாலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 24ந்தேதி முதல்முறையாக பீகாரின் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

பதவியேற்பு விழாவில் மகாகத்பந்தன் கூட்டணியின் முக்கிய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக கூட்டணியிலிருந்து விலகியது முற்றிலும் கட்சி எடுத்த முடிவு என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.