அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய தடயமாக கிடைத்துள்ள மாருது சுசுகி வெர்ஷா கார் யாருடையது என்பதை விசாரிப்பதற்காக கோவையில் சிறப்பு விசாரணைக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ந்தேதி காலை நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவரது சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் மீட்கப்பட்டது.
படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகியும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. முதலில் உள்ளூர் போலீசாரால் நடத்தப்பட்ட இந்த விசாரணை பின்னர் சிபிசிஐடிக்கும் அதன் பின் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. அப்போதும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து சரியான தகவலை கொடுப்பவர்களுக்கு ரூ.50,00,000 சன்மானம் வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
வழக்கின் முக்கிய தடயமாக சிக்கியுள்ள மாருதி சுசுகி வெர்ஷா கார் வாகனம் யாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டால் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்பதால் அதனை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழக முழுவதும் 1400 மாருதி சுசுகி வெர்ஷா கார்கள் உள்ள நிலையில் அந்த கார்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. கோவையில் மட்டும் 250 மாருதி சுசுகி வெர்ஷா வாகனங்கள் உள்ளதால் அந்நகரில் முகாமிட்டு அந்த வாகனங்களின் உரிமையாளர்களிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.







