தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் உதிரி பாகங்கள் பற்றாக்குறையாக உள்ளதை போக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகரில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகரில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. பரீட்சார்த்தமான முறையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின்னர் தமிழக முழுவதும் மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பேருந்துகளில் முதல்கட்டமாக சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழக முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க காலதாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு காலதாமதம் விரைவில் தீர்க்கப்படும்.
போக்குவரத்து கழகப் பேருந்துகளை காப்பீடு செய்வதற்கு உண்டான ஆய்வு நடைபெற்று வருகிறது என்றார் அமைச்சர் சிவசங்கர்.








