ராமதாஸின் அதிரடி நடவடிக்கை – பாமகவில் பலரது பதவிகள் பறிப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸின் அதிரடி நடவடிக்கையால் அக்கட்சியில் இருந்து பலரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸூக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸூக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக அண்மையில் ராமதாஸ் அளித்த பேட்டியில், அன்புமணி ராமதாஸூக்கு தலைமை பண்பு இல்லை, தாய் மீது பாட்டில் வீசினார், வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தார்.

இதனிடையே பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாட்டிற்கு பிறகு ராமதாஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இதில் குறைந்த அளவிலான மாவட்ட செயலாளர்களே பங்கேற்றனர். இது பாமகவில் ராமதாஸுன் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியதாக பேசப்பட்டது. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் நேற்றும் இன்றும்(மே.31)  பாமக ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் அவருக்கு ஆதரவாக பாமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

நேற்றைய கூட்டத்தின்போது அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா, அன்புமணி ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதற்காக, அவர் வகித்து வந்த கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ் திலகபாமா அந்த பதவியில் தொடருவார் என அறிவித்தார். அத்துடன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க பாமகவின் பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று அறிவித்தார்.

இந்த நிலையில் ராமதாஸ், கட்சிப் பொறுப்பில் இருந்து பலரை தொடர்ந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி திலகபாமா உட்பட கடலூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளுர், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்ட செயலாளர்களையும், 4 மாவட்ட தலைவர்களையும் நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.