‘கண்ணப்பா’ படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்… பின்னணியில் குடும்ப பிரச்னை.. நடிகர் விஷ்ணுமஞ்சு பரபரப்பு தகவல்!

‘கண்ணப்பா’ படத்தின் முக்கியமான ஹார்ட் டிஸ்க் மாயமானதாக நடிகர் விஷ்ணுமஞ்சு தெரிவித்துள்ளார்.

சிவத்தொண்டு புரிந்து சிவன் அருளை முழுவதுவமாக பெற்றவர்கள் நாயன்மார்கள். 63 நாயன்மார்கள் உள்ளனர். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலுடன் தொடர்புடையவர் கண்ணப்ப நாயனார். இவர் வேடர் குலத்தில் திண்ணன் என்பவராக பிறந்து, நாத்திகராக இருந்து பின்னர் சிவனடியாராக மாறியவர் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான அல்லது மாறுபட்ட முறையில் சிவபூஜை செய்து, சிவனுக்காக தனது கண்ணை கொடுத்தவர் என்று நம்பப்படுகிறது. அவரின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல கோணங்களில் சினிமாவாக வந்துள்ளது.

லேட்டஸ்ட்டாக அவர் புராணத்தை ‘கண்ணப்பா’ என்ற பெயரில் எடுத்து வருகிறார் இயக்குநர் முகேஷ் குமார் சிங். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் பான் இந்தியா படமாக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. இப்படம் ஜூன் 27ல் ரிலீஸ் ஆகிறது. இதில் கண்ணப்பராக விஷ்ணுமஞ்சுவும், அவர் மனைவியாக ப்ரீத்திமுகுந்தனும் நடிக்கிறார்கள்.

பெரிய படம் என்பதால் இதில் மோகன்லால்,  பிரபாஸ், சரத்குமார், மதுபாலா, மோகன்பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அக்ஷய்குமார் சிவனாகவும், காஜல் அகர்வால் பார்வதியாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் நடந்த இந்த படவிழாவில் பேசிய விஷ்ணுமஞ்சு, ‘‘இந்த படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. ஒரு மலை, ஒரு ஆறு, அருகில் சிவன், அந்த காலத்தில் கதை நடக்க வேண்டும் என்ற லொகேஷனை தேடிய போது, நியூசிலாந்தில்தான் அப்படிப்பட்ட இடம் கிடைத்தது. அங்கே குளிரும் அதிகம். வெயிலும் அதிகம்.

அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம். சிவன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் படப்பிடிப்புதளத்தில் பல அதிசியங்கள் நடந்தன. நாங்கள் முறைப்படி சிவனுக்கு பூஜை செய்து வேலைகளை தொடங்கினோம். காளகஸ்தி புராணம், பாடல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து பல செய்திகளை எடுத்து சீன்களாக மாற்றி இருக்கிறோம். பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் சிவனாக, காஜல் பார்வதிதேவியாக வருகிறார்கள். ரோஜா மதுபாலாவுக்கு முக்கியமான ஆதிவாசி ராணி கேரக்டர். அவருக்கு போர்காட்சிகள் இருக்கிறது.

எங்கள் குடும்ப படம் என்பதால் அப்பா, என்னை தவிர, என் மகள்கள், மகன் கூட இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். ஜூன் 27ல் படம் ரிலீஸ். சிவனே உத்தரவிட்டு நாங்கள் இந்த படத்தை எடுத்ததாக உணர்கிறோம். இந்த படத்தின் காட்சிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான ஹார்ட் டிஸ்க் காணாமல் போய் உள்ளது. அது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளோம். குடும்ப பிரச்னை என்பதால் அது பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.