ஆகாஷவாணியில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

ஆகாஷவாணியில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

அகில இந்திய வானொலியில் தமிழ்ப்பட பாடல்கள்  புறக்கணிக்கப்பட்டு இந்தி பாடல்கள் ஒலிபரப்புவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் சென்னை மற்றும் திருச்சி பண்பலை அகில இந்திய வானொலியில் (ஆகாஷவாணி) இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5.45 மணி வரைக்கும் இனிமையான தமிழ் பட பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள், இரவில் பணியில் இருப்பவர்கள் மற்றும் நீண்ட தூரம் காரில் பயணிப்பவர்கள் வானொலியில் ஒலிப்பரப்படும் தமிழ் பட பாடல்களை கேட்டு களைப்பில்லாமல் வேலை செய்து வந்தார்கள்.

தற்போது தமிழ் பாடல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, இந்தி பட பாடல்கள் ஒலிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இது இந்தி திணிப்பிற்கு மற்றொரு உதாரணமாகும். ஆகாஷவாணியில் மாநிலங்களின் மொழி, கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சார உணர்வுகள் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் வேண்டுமென்றே இந்தியை திணிப்பது கடும் கண்டனத்துக்குரியது. சென்னை, திருச்சி பண்பலைகளில் மீண்டும் தமிழ்பட பாடல்களை ஒலிபரப்பு செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.