மாநிலங்களவைத் தேர்தல்: 9 இடங்களில் பாஜக வெற்றி

16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன்…

16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே, தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு தேர்வாகி விட்டனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், ஹரியானாவில் 2 எம்.பி இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், பாஜக சார்பில் நடிகர் ஜெக்கேஷ், லெஹர் சிங் ஆகியோரும் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.

அதேபோல ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரமோத் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோரும், பாஜகவின் கன்ஷியாம் திவாரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

விதிகளை மீறி சிலர் வாக்களித்த தாக எழுந்த புகாரையடுத்து மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று அதிகாலை வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 6 இடங்களில் பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலா 1 இடத்திலும் வெற்றிபெற்றன. பாஜகவின் பியூஷ் கோயல் 48 வாக்குகள் பெற்று வென்றார். சிவசேனாவின் சஞ்சய் பவார் தேர்தலில் தோல்வியடைந்தார். ஹரியானாவில் பாஜக ஒரு இடமும், பாஜக ஆதரவு சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.