மாநிலங்களவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாக, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், இரு அவைகளிலும் பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டம் ஆகியவை தொடர்பாக விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
பதாகைகளை ஏந்தியும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இருந்தாலும் மத்திய அரசு சில மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.
இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை கிளப்பின. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை பகல் 12 மணி வரையும் மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, மாநிலங்க ளவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாகக் கண்ணீர் விட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு அவையில் எல்லை மீறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மேஜைகளின் மீது அமர்ந்தும், சிலர் மேஜை மீது ஏறி நின்றும் அவையின் மாண்பை அழித்துவிட்டனர் என்றும், அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.








