அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை, நடிகர் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்யக் கோரி, சென்னையில் அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, தம்மால் அரசியலுக்கு வர இயலாது என்றும், அரசியல் கட்சி தொடங்கவில்லை எனவும், நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது முடிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை, நடிகர் ரஜினிகாந்த் மறுபரிசீலனை செய்யக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்திருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின்போது, “வா தலைவா வா” “இப்போது இல்லைன்னா, எப்போதும் இல்லை..” “உங்கள் ஆட்சி வேண்டும்”, என்பது உள்ளிட்ட முழக்கங்களையும் ரஜினி ரசிகர்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் ‘அரசியலுக்கு வாங்க ரஜினி’ ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.







