ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களிலும் ‘இரவு நேர வானியல் சுற்றுலா’ வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான வசதி உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
2019ல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். இந்த சூழலில், வானியல் மீதான ஆர்வம் மெள்ள அவர்களிடத்தில் துளிர்விடத் தொடங்கியுள்ளது. நட்சத்திரங்கள், விண்மீன்கள், இதர கோள்கள் உள்ளிட்டவை குறித்த செய்திகளையும், தகவல்களையும் மக்கள் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்களின் இந்த ஆர்வத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ராஜஸ்தான் மாநில அரசு மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களிலும் ‘இரவு நேர வானியல் சுற்றுலா’ வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் முகதா சின்ஹா தெரிவித்துள்ளார்.
முதலில் அம்மாநில தலைமை செயலக வளாகத்தில் ‘இரவு நேர வானியல் சுற்றுலா’ வசதி உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், இதர மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்து இந்த சேவையை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்ததையடுத்து மாநிலம் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான திட்டத்திற்கும் முதலமைச்சர் அசோக் கெலாட் இசைவு தெரிவித்துள்ளதாகவும் முகதா கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ‘இரவு நேர வானியல் சுற்றுலா’ வசதி கொண்ட முதல் மாநிலமாக உருவெடுக்கிறது ராஜஸ்தான்.