ஆபாசப்பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, ராஜ் குந்த்ரா சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக தனி செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்ததாக மும்பை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை எடுக்கவில்லை என்றும் பாலியல் கிளர்ச்சியூட்டக் கூடிய படங்களை மட்டுமே எடுத்தார் என்றும் தெரிவித்தார். அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிலையில், ராஜ்குந்த்ராவிடம் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் அவருக்கு எதிராக அப்ரூவர் ஆகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.
அப்போது, அரசு வழக்கறிஞர், ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு ராஜ்குந்த்ராவின் வழக்கறிஞர், ராஜ் குந்த்ரா என்ன தீவிரவாதியா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அவர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.








