கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உதகையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது கொரோனா 3-ம் அலைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகளின் செயலாற்றலால் ஏராளமான நாடுகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் பொதுவெளியில் நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் அதி தீவிரமடைந்த கொரோனா தாக்கத்தின் காரணமாக ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகினர். அதில் பலர் உயிரிழந்ததையும் நாம் அறிவோம். இதனையடுத்து இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நோக்குடன் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏராளமான முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரை ஊக்குவிக்கும் விதமாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 780 ரூபாயும், தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டவர்களுக்கு 1,560 ரூபாயும் வழங்கப்படும் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வழங்கி இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.








