13,210 பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’; இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வானவில் மன்றம்’…

மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வானவில் மன்றம்’ தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி.

இதற்காக ஆர்வமும் செயல்திறனும் மிக்க கருத்தாளர்கள் இந்த திட்டத்தை பள்ளிகளில் செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கிட வருவார்கள். தேவையான துறை கருவிகளையும் அவர்களே கொண்டு வருவார்கள். இதையடுத்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளை செய்து காட்டி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவுவர்.

இந்த திட்டத்துக்காக 3,095 உயர்நிலைப்பள்ளிகள், 3,123 மேல்நிலை பள்ளிகள், 6,992 நடுநிலை பள்ளிகள் என மொத்தம் 13,210 பள்ளிகளுக்கு அரசு மொத்தம் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் வைத்து தொடங்கி வைக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.