விழுப்புரம் நகரின் மைய பகுதியிலுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விழுப்புரம் நகரின் மைய்பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம்
பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஒன்றாக
இயங்கி வருகிறது . தொடக்கப் பள்ளியில் 420 மாணவர்கள் மற்றும் உயர்நிலைப்
பள்ளியில் 850 மாணவர்கள் என 1270 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தை சரியான முறையில் சீர்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் மேற்கொள்வதால் மழைக்காலங்களில் மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவது குறித்து பெற்றோர்கள் 3 நாட்களாக புகார் அளித்தும் நகராட்சி துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை உள்ள நிலையில் இதுபோன்ற மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் முன் வராததாலும் ஆணையரின் தொடர் அலட்சியப் போக்கால் ஆசிரியர்கள் ,மாணவர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.







