ரயிலில் முன்பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ் கொண்டு சென்றால், ஆறு மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி சில புதிய முக்கியக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயணிகள் ரயிலில் பயணம் செய்யும்போது தாங்கள் கொண்டு வரும் லக்கேஜ் குறித்து, பார்சல் அலுவலகத்தில் முதலிலேயே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யாமல் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் சாதரணக் கட்டணத்தைவிட ஆறு மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பயணிக்கும் வகுப்பை பொறுத்து 35 முதல் 70 கிலோ வரை லக்கேஜுகளை இலவசமாகக் கொண்டு செல்லலாம். ஏசி முதல் வகுப்பு என்றால் 70 கிலோ வரை லக்கேஜை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஏசி 2-டையர் ஸ்லீப்பர்/முதல் வகுப்புக்கு 50 கிலோ வரை எடுத்துச் செல்லலாம். ஏசி 3-டையர் ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் இலவசமாக லக்கேஜை கொண்டு செல்லலாம்.
இந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொண்டு செல்லப்படும் லக்கேஜுகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படவுள்ளது. ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு லக்கேஜை பார்சல் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போதும் லக்கேஜ் குறித்து பதிவு செய்து கொள்ளலாம். உரிய பாதுகாப்புகளுடன் பேக் செய்யப்படாத லக்கேஜுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








