வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா – நரேந்திர மோடி

இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, கடந்த 8 ஆண்டுகளில்…

இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, கடந்த 8 ஆண்டுகளில் சீர்திருத்தம், சிறப்பான செயல்பாடு, மாற்றம் என்ற மந்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.80 ஆயிரம் கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என குறிப்பிட்டார். இது உத்தரப்பிரதேச இளைஞர்களுக்கு மிகவும் பலன் தரும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சியை நினைத்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி20 நாடுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சியை நமது நாடுதான் கொண்டிருக்கிறது என்றார்.

உலகில் இணைய சேவைப் பயன்பாட்டில் 2ம் இடம், சர்வதேச அளவில் பொருட்கள் விற்பனையில் (Global Retail Index) 2ம் இடம், மின்சார உபயோகத்தில் 3ம் இடம் என நமது நாடு சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட நரேந்திர மோடி, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய உச்சத்தை நாடு எட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.

ஒரு நாடு; ஒரே வரி, ஒரு நாடு; ஒரே மின்விநியோக தொகுப்பு, ஒரு நாடு; ஒரே பயண அட்டை, ஒரு நாடு; ஒரே ரேஷன் அட்டை போன்ற நடவடிக்கைகள் காரணமாக அரசின் திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய நடவடிக்கைகள் எளிதாக தொழில் தொடங்கவும் வழி வகுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.