மலேசியாவில் ‘Datuk’ திரைப்பட விநியோகஸ்தருக்கு தொடர்புடைய 34 இடங்களில் நடைபெற்ற சோதனையில், இந்திய ரூபாய் மதிப்பில் 68 கோடி ரூபாய் ரொக்கம், 200 கிலோ தங்கம் மற்றும் 17 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையிலான பல விசாரணை அமைப்புகள் சேர்ந்து ‘Datuk’ திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்திய ரூபாய் மதிப்பில் 68 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு 200 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சோதனையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தவிர, ராயல் மலேசியா போலீஸ், குடிவரவுத் துறை, சுங்கத் துறை, பேங்க் நெகாரா மலேசியா, உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் சைபர் செக்யூரிட்டி மலேசியா ஆகியவையும் ஈடுபட்டன.
இந்த நடவடிக்கையில், ஏஜென்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இதனை அடுத்து ‘Datuk’ திரைப்பட விநியோகஸ்தர் மீதான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டார். ஃபெராரி, மசராட்டி உள்ளிட்ட 17 சொகுசு வாகனங்களையும் சோதனைக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
தகவல்களின் படி கைது செய்யப்பட்டுள்ள ‘Datuk’ திரைப்பட விநியோகஸ்தர், அரசியல் தொடர்புடையவர் மற்றும் லஞ்சம், பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளிலும் சந்தேகிக்கப்படும் கடத்தல் குழுவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரது பெயரோ, தனிப்பட்ட விபரங்களோ எதுவும் இதுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை.







