அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அவதூறு வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

அவதூறு வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டில் கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி குறித்தும் அவரது சமூகம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரின் எம்பி பதவியும் தகுதி இழப்பு செய்யப்பட்டது.

சூரத் செசன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. செசன்ஸ் நீதிமன்றம், அவருக்கு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. முன்னதாக ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது தனது கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து புர்னேஷ் மோடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவர் மீண்டும்  எம்.பி.பதவியை பெற முடியும். அதனால் உச்ச நீதிமன்றத்தை தீர்ப்பை காங்கிரசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.