காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார்.
2014, 2019 என இரண்டு மக்களவைத் தேர்தல்களில் இரட்டை இலக்க எம்.பி.க்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. 2019 தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். கட்சியை மறுசீரமைக்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுபோலவே தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் உதய்பூரில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு ’நவ் சங்கல்ப் சிந்தன் சிவிர்’ எனப்படும் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அடுத்த ஓராண்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொள்கிறார், அதில் பெரும்பகுதி பாதயாத்திரையாக இருக்கும் என ஏஎன்ஐ தகவல் வெளியிட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நாடு முழுவதும் ராகுல்காந்தி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அக்கட்சியினருடைய ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போதைய தகவல் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. யாத்திரை மூலம் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்த வரலாறுகள் இந்திய அரசியலில் உள்ளன. ஆகவே, ராகுலின் யாத்திரையும் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் என நம்புகிறார்கள் காங்கிரஸார்.
Advertisement: