திமுகவிற்கு திராவிட மாடல் என்றால் பாமகவிற்கு பாட்டாளி மாடல் என தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
தருமபுரியில் பாமக சார்பில் பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொதுக்குழுவில் பேசிய அன்புமணி, “திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் செய்தது சாதனை அல்ல. கடந்த 40 ஆண்டுகளாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை போராடி பெற்றது பாமகதான். இதனால் பாமகவிற்குதான் சாதனை, ஆட்சியாளர்களுக்கு இது சாதனை அல்ல கடமை. திமுகவிற்கு திராவிட மாடல் என்றால், பாமகவிற்கு பாட்டாளி மாடல்” என்று குறிப்பிட்டார்.
2016 தேர்தலை மாற்றம், முன்னேற்றம் என்ற அடிப்படையில் சந்தித்தோம் எனவும், 2026 தேர்தலை பாமக 2.0 என்ற அடிப்படையில் சந்திக்க உள்ளோம், விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்ற அன்புமணி, “ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதனை அரசு தடை செய்ய முன்வர வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், “இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு விலக வேண்டும். லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்கள் மகிந்தா ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே. இலங்கை அதிபருக்கு வழங்கக்கூடிய அதிகாரத்தை குறைத்தால் இது போன்ற கலவரங்கள் ஏற்படாது” என பேசினார்
Advertisement: