முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

மனுஷங்களும் டைனசர்ஸும் ஒன்னா வாழவே முடியாதா?


வேல் பிரசாந்த்

கட்டுரையாளர்

‘அந்……த காலம் அது அது அது அது ஜுராசிக் பார்க் காலம்..!’ என்று 80 மற்றும் 90களில் பிறந்த குழந்தைகள் ஆனந்த் கண்ணீர் மல்க பாடுமளவிற்கு அவர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடத்த படம் என்றால் அது ஜுராசிக் பார்க் என்றே சொல்லலாம். ஆயிரமாயிரம் மயில்களுக்கு அப்பால் ஹாலிவுட்டில் உருவான ஜுராசிக் பார்க் படம் தென்கோடி தமிழக மக்கள் வரை அதே வீச்சில் வியக்க வைத்தது. அரசு பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு முறை இன்பச்சுற்றுலா என்று சினிமாவுக்கு அழைத்து செல்லும் போது பெரும்பாலும் ஜுராசிக் பார்க் தான் நமது தேர்வாக இருக்கும். அபோது நாம் திரையரங்கிற்குள் நுழைந்திருக்க மாட்டோம்; ஜுராசிக் பார்க்கிற்க்கு உள்ளாகவே நுழைந்திருப்போம். ஜூராசிக் உலகத்திற்குள் நாம் அனுபவித்த புத்துணர்ச்சி, பயம், பரபரப்பு, சாகசம் என அத்தனை உணர்வுகளையும் படம் பார்க்காத நமது நண்பர்களிடமும் பகிர்ந்து மகிழ்ந்த அந்த காலம் வசந்த காலம் தான்!

1990ல் மைக்கேல் கிரைட்டன் என்பவர் எழுதி வெளியிட்ட ‘ஜுராசிக் பார்க்’ எனும் science fiction நாவலை தழுவி எடுக்கப்பட்டு1993ல் வெளியிடப்பட்ட திரைப்படம் ‘ஜுராசிக் பார்க்.’ அழிந்துபோன உயிரமான டைனோசரின் தொன்மங்களின் DNA-க்களை கொண்டு க்ளோனிங் முறையில் உயிர்ப்பிக்கப்பட்டு ஜுராசிக் பார்க்கில் உலாவிடுவதன் விளைவாக நடக்கும் சாகசங்களே இப்படம் என்று நாம் அனைவரும் அறிந்ததே!. அமெரிக்க கண்டத்தில் இருக்கக்கூடிய கோஸ்டா ரிக்கா நாட்டிலிருந்து 120 மைல்களுக்கு அப்பால் இருக்கும் கற்பனை தீவில் தான் ஜுராசிக் பார்க் அமைந்திருக்கும். கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் அந்த தீவில் ஹெலிகாப்டரில் தரையிறங்கும் காட்சியில் இருந்தே நம்மை கட்டிப்போட்டிருப்பார் இயக்குநர் ஸ்பீல் பெர்க் .

சாதாரன ஆக்‌ஷன் மாசால திரைப்படங்களுக்கே ஆண்டுக்கணக்கில் ஷுட்டிங் நடத்தி தயாரிப்பாளர்களை போண்டியாக்கும் பல இயக்குநர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் உலக சினிமாவில் அதுவரை கண்டிராத பிரம்மாண்ட காட்சிகளை கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஸ்பீல் பெர்க எடுத்துக்கொண்ட காலம் 10 மாதங்கள் தான். 3 மாதங்கள் படப்பிடிப்பிற்காகவும் 6 மாதங்கள் CGI உள்ளிட்ட மற்ற தயாரிப்புகளுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜுராசிக் பார்க் படத்தின் இறுதி தயாரிப்புகளை மேற்பார்வையிட்டுக்கொண்டே தான் உலக சினிமா வரலாற்றில் மற்றொரு சிறந்த படமான அவரின் Schindler’s List-ஐயும் இயக்கிக்கொண்டிருந்தார் ஸ்பீல் பெர்க்.

ஜூராஸிக் பார்க் வெளியாகி அதுவரை வெளியான படங்களின் அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தது (இதன் பிறகு டைட்டானிக் தான் ஜூராசிக் பார்க்கின் சாதனையை முறியடித்தது). இப்படத்தை தொடர்ந்து ஜுராசிக் பார்க்கை கொண்டு காமிக்ஸ் புத்தகங்கள், Animated படங்கள், வீடியோ கேம்கள், தீம் பார்க்குகள் என்று பெரும் வணிகம் நடைபெற்றது. சங்கரின் ஜீன்ஸ் படத்தில் கூட அப்போதைய வசதிக்கேற்ப டைனோசரை உருவாக்கி ஒரு கேமியோ செய்ய வைத்திருப்பார். அதுமட்டுமல்லாமல் அப்படத்தின் ‘வாராயோ தோழி’ பாடலின் ஒரு காட்சிக்காக, மிகவும் கடினப்பட்டு தனது அமெரிக்க நண்பர்களின் உதவியால் ஜுராசிக் தீம் பார்க்கில் அனுமதி வாங்கி அக்காட்சிகளை சங்கரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் உள்ள சினிமா இயக்குநர்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை இப்படம் ஏற்படுத்தியது.

இந்த வெற்றிக்கு CGI தொழில்நுட்பமோ, அதனை வைத்து உருவாக்கப்பட்ட டைனோசர் மட்டுமோ காரணமல்ல . எளிமை கலந்த அழுத்தமான சுவாரஸியமான திரைக்கதை அமைப்பும் அதனை இயக்குநர் ஸ்பீல் பெர்க் படமாக்கிய விதமுமே இதை காவியமாக்கியது. மேலும் ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக மேலும் பல படைப்புகள் வர வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்க தொடங்கினர். இந்நிலையில், the lost world என்ற ஜுராசிக் பார்க்கின் sequel நாவலை எழுதி 1995ல் வெளியிட்டார் மைக்கேல் கிரைட்டன். உடனே The Lost World: Jurassic Park படத்திற்கான பணிகள் தொடங்கியது. 1997ல் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டிருந்தாலும் கதைக்களமும் கதாப்பாத்திரங்களும் முந்தை படத்தை போல் சுவாரஸிமாக இல்லை என்ற விமர்சனங்களையும் பெற்றது.(முந்தைய படத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘சாம் நெய்ல்’ இல்லாததும் பெரிய குறையாக பேசப்பட்டது).

இருந்தும் ஜுராசிக் பார்க்கின் அடுத்த பாகத்திற்கான கோரிக்கைகள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தன. மூன்றாம் பாகத்தை படக்குழுவினர் எழுக்க முன்வந்த போது, அதனை இயக்க மறுவிட்டார் ஸ்பீல் பெர்க். முந்தைய படங்களிலேயே தான் திருப்தியடைந்து விட்டதாகவும் மீண்டும் அந்த படத்திற்குள் செல்ல ஆர்வம் இல்லை என்றும் காரணம் சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குநர் ஜோ ஜான்ஸ்டன் இயக்க, Executive producer-ஆக பணிபுரிந்தார் ஸ்பீல் பெர்க். இப்படம் ஜுராசிக் பார்க் புத்தகத்தின் கருவையும், கதாப்பாத்திரங்களையும் கொண்டிருந்தாலும் அந்நாவலின் கதை தழுவல் இல்லாமல் எடுக்கப்பட்டது. இதுவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் முந்தைய படங்களை போல மக்களால் கொண்டாடப்படவில்லை.

 

இப்படத்திற்கான அடுத்த பாகங்களையும் இயக்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்திருந்தாலும் சரியான திரைக்கதை அமையாததால் தாமதமாகிக்கொண்டே போனது. ஆண்டுகளும் கடந்தது. பின்பு ஒருவழியாக 2013ல் மீண்டும் ஜுராசிக் பார்க்கிற்கின் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது. ஜுராசிக் வோர்ல்ட்(jurassic world) என்ற பெயரிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு Executive producer-ஆக பணியாற்றிய ஸ்பீல் பெர்க்கின் பரிந்துரைப்படி முந்தைய படங்களில் பணியாற்றாத திரைக்கதை எழுத்தாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். ‘கொலின் ட்ரெவோரோ’ இப்படத்தை இயக்கினார். 2015ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. இப்படத்தில் நடித்த கிறிஸ் பிராட் ஜுராசிக் பார்க் முதல் பாகத்தின் கதாநாயகனான ‘சாம் நெய்ல்’ போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இப்படத்தின் இரண்டாம் பாகமான Jurassic World: Fallen Kingdom-ம் ஜுராசிக் பார்க்கின் இரண்டாவது பாகத்தை போலவே கலவையான விமர்சனங்களுடன் வெற்றி பெற்றிருந்தது. ‘கொலின் ட்ரெவோரோ’ இப்படத்தை இயக்காததும் ஒரு குறையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் ‘கொலின்’ இயக்கத்தில் உருவாகும் மூன்றாம் பாகமான ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்கள் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பே இந்தியாவின் பல்வேறு நகரங்களில் டிக்கெட் முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது.

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் வந்த முக்கியமான கதாபாத்திரங்களான Sam Neill, Laura Dern ஆகியோர் மீண்டும் இந்த திரைப்படத்தில் வருவது, ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது. டைனோசர்களும் மனிதர்களும் இணைந்து வாழ முடியுமா? என்று அதிகம் பேசப்படும் வாதத்தை, இப்படம் இன்னும் பிரம்மாண்டமாக காட்டவிருக்கிறது. இந்நிலையில், 30 ஆண்டுகால ஜுராசிக் பார்க் நினைவுகளுடன் ‘இந்த காலம் இது இது இது இது இதுவும் ஜுராசிக் பார்க் காலம்’ என்று பிரியாவிடை கொடுக்க உலகம் முழுவதும் உள்ள ஜுராசிக் பார்க் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

Advertisement:
SHARE

Related posts

தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!

Saravana Kumar

முன்னாள் மாமனார் நாகார்ஜுனா ஸ்டூடியோவுக்கு சமந்தா சென்றது ஏன்?

Halley Karthik

பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மமதா போட்டி

Saravana Kumar