விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய கோரி ராகுல் காந்தியில் நடைபயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் பாதயாத்திரையாக செல்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜஸ்தானில் 100வது நாள் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெயணம் மேற்கொண்டார். இந்நிலையில், ஆல்வார் பகுதியில் உள்ள புர்ஜா பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நடைபயணத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோரும் பாதயாத்திரையாக சென்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதால் உடனடியாக விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்.