ராகுல் காந்தி இன்று 14வது நாளாக கொச்சியிலிருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.
கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கிவைத்தார். 3 நாட்களாக கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் கடந்த 11ம் தேதி முதல் கேரளாவில் நடைபயணத்தை தொடங்கினார்.
இன்று 14வது நாளாக கேரள மாநிலம் கொச்சியிலிருந்து காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தின் போது கேரள மக்கள் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். கேரள நடைபயணத்தின் போது சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடுவது, தேநீர் கடைகளில் சாமானிய மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது, படகு ஓட்டியது உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறியது.
கேரளாவில் 18 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். கேரளாவில் நடைபயணம் தொடங்கி 10 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.







