கோவா பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய ராகுல் காந்தி தன்னுடன் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். மேலும் மற்றொரு நாய்க்குட்டியும் அவரது வீடு தேடி விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு கோவாவுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் நேராக தலைநகர் பனாஜி அருகே தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டலுக்கு சென்று, கோவா
மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேருடனும் இரவு உணவு சாப்பிட்டதோடு, கோவா மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கோவா மாநில அரசியல் நிலவரம், கட்சியை பலப்படுத்துவது குறித்து அவர்களுடன் பேசியதோடு, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றியும் அவர்களுடன் விவாதித்தார்.
பின்னர் மறுநாளான நேற்று கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில் மபுசா நகரில் உள்ள ஷிவானி பித்ரேவின் நாய் பண்ணைக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்த நாய்க்குட்டிகளுடன் சிறிது நேரத்தை செலவிட்டுள்ளார்.
பிறகு ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக இரண்டு நாய்க்குட்டிகளை தேர்வு செய்த ராகுல் காந்தி, அதில் ஒன்றை விமானம் மூலம் டெல்லி எடுத்து வந்து தனது வீட்டுக்கு
கொண்டு வந்துள்ளார். இது குறித்து நாய் பண்ணை உரிமையாளர் ஷிவானி பித்ரே பேசுகையில் ” பண்ணைக்கு வந்த ராகுல் காந்தி தங்களிடம் பணிவுடனும், அன்புடனும் நடந்து கொண்டதாகவும், அவர் தேர்வு செய்த இரண்டு நாய் குட்டிகளில் ஒன்றை அவரே கையுடன் எடுத்து சென்றுள்ள நிலையில், மற்றொரு நாய்க்குட்டி கூடிய விரைவில் அவருக்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








