ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அடிக்கல் நாட்டும் நிலையில், ஆதிச்சநல்லூர் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்…
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர்களின் தொன்மையும் சிறப்பும் உலகின் பார்வைக்கு தெரியத் தொடங்கிவிட்டது.
முதன்முறையாக 1876ஆம் ஆண்டு டாக்டர் ஜாகோர் இந்தியாவிலேயே முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வை தொடங்கினார். 1902ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் இரியா ஆய்வு செய்து ஏராளமான பொருள்களை சென்னை மியூசியத்தில் கொண்டு வைத்தார். மேலும் கிடைத்தபொருள்களையும் பட்டியலிட்டார்.
1920ஆம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தினை ஆய்வு செய்த டாக்டர் பேனர்ஜி என்பவர் சிந்துசமவெளி நாகரிகமே தாமிரபரணி நாகரிகம், அது ஆதிச்சநல்லூர் நாகரிகம் என ஆங்கில கட்டுரை எழுதினார். 2020ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார்.
அதன்படி, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே கண்ணாடித்தளம் மேல் நின்று கொண்டு கீழே பார்வையிடும் (On Site) “உள்ளது உள்ளபடியே” என்ற அடிப்படையில் இங்கு பார்வை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பார்வைக்கூடத்தை நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார்.
இதனை அடுத்து அகழ்வராய்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் நாளை மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த முழு செய்தியை காணொளியாக காண:







