எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன் முறையாக தனது தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி பேரணி நடத்தினார். காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனை நிறுத்தியும் வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 3ம் தேதி மேல்முறையீடு செய்வதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இன்று முதல் முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வருகை புரிந்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இணைந்து பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.
வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலையில் பேரணியாக சென்றார். திறந்த வாகனத்தில் நின்றபடி ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் கையசைத்தபடி சென்றார். ராகுல் காந்தி சென்ற வாகனத்தின் முகப்பில் ”வாய்மையே வெல்லும்” என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.







