2024 தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரண்டு நாள் வடகிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அசாமில் உள்ள திப்ருகாரில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பேரணிலும் கலந்து கொண்ட அவர் அதில் பேசும்போது ” 2024 தேர்தலில் பாஜக அசாமில் உள்ள 14 தொகுதிகளில் 12ல் வெற்றி பெறும் என்றும், அதே போல் தேசிய அளவில் 300-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்” எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாக அவர் “ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக வடகிழக்கு இருந்தது. ஆனால், தற்போது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எட்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெளியேற்றப்பட்டுள்ளது. அதே போல் ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியே சென்று நாட்டிற்கு எதிராகப் பேசுகிறார். நான் இன்று ராகுல் காந்தியிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இப்படி செயல்படுவதை நிறுத்தாதீர்கள்.
அப்போது தான் காங்கிரஸ் நாடு முழுவதுமே வெளியேற முடியும்… அதோடு, இன்று ‘Modi Teri Kabr Khudegi’ என்று பல இடங்களில் காங்கிரஸ் சொல்கிறது. நான் அவர்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.120 கோடி மக்கள் மோடிஜியின் நீண்ட ஆயுளுக்காக இரவும் பகலும் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் மோடிஜியை எவ்வளவு அதிகமாக அவதூறு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை இன்னும் பிரகாசமாக மலரும். ” என்று அமித் ஷா கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா