டெல்லியில் இருந்தபடி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழக அரசு இயங்குவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 2வது நாளாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஊத்துக்குழியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர, தான் தமிழன் தான் என கூறினார். அறிவுரை கூறுவதற்காக இங்கு வரவில்லை என கூறிய ராகுல்காந்தி, மக்களின் பிரச்சனையை அறிந்து கொள்ள வந்திருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு புதிய வேளாண்மை சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருப்பதாகவும், 5 பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத் தொடர்ந்து, அவல்பூந்துறையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்தோமோ இல்லையோ, வேலை வாய்ப்பை இழந்ததாக கூறினார். டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழக அரசு இயக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, இந்த ஆட்சியை அகற்றி நல்லாட்சி கொண்டுவருவதற்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அறச்சலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, ஓடாநிலை பகுதியில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நெசவாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். இதற்கிடையே, 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக அறிக்கை வெளியிடுமாறு ராகுல்காந்தியிடம், ஈரோட்டில் மக்கள் சிவில் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காங்கேயம் பேருந்து நிலையம் அருகே வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் அவர்களிடையே பேசிய அவர், தமிழ்நாட்டுடனான தனது உறவு, அரசியல் ரீதியானது அல்ல என்றும், அதுவொரு குடும்ப உறவு, என்றும் குறிப்பிட்டார். தமிழ் கலாச்சாரத்தையும், மக்களையும் யாராலும் ஏமாற்ற முடியாது என்றும், தமிழக இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது, என்றும் ராகுல் குறிப்பிட்டார். மேலும், உங்களுடைய சிப்பாயாக டெல்லியில் தனது குரல் ஒலிக்கும், என்றும் அவர் தெரிவித்தார்.