அனல் பறக்கும் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு இடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சுடச்சுட காளான் பிரியாணி தயாரித்து பரிமாறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்னவீரமங்கலம் கிராமத்தைச் சேரந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட இளைஞர்கள் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் காளான் பிரியாணி தயாரிப்பதை நேரில் பார்த்த ராகுல் காந்தி, பிரியாணி மணத்தில் ஈர்க்கப்பட்டு, அவரே வெங்காய தயிர் பச்சடியை தயாரித்தார். அப்போது வெங்காயம், தயிர், கல் உப்பு என்று அவர் கூறிக் கொண்டே, யூடியூப் குழுவினரைப் போன்று தயிர் பச்சடி செய்தது கலக்கலாக இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் ஓலைப் பாயில் அமர்ந்து, தலைவாழை இலையில் தண்ணீர் தெளித்து ராகுல் காந்திக்கு உணவு பரிமாறப்பட்டது. மூத்த சமையல் கலைஞர் பெரியதம்பி ஐயா உள்ளிட்ட யூடியூப் குழுவினரிடையே அமர்ந்து காளாண் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்டார் ராகுல். சாப்பிட்டதோடு முடித்துக்கொள்ளாமல், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சமையல் குழுவினரின் எதிர்கால இலக்கு பற்றியும் ராகுல்காந்தி கேட்டறிந்தார். அமெரிக்காவில் உள்ள தமது நண்பர் மூலம் உணவு தயாரித்து வழங்க உதவுவதாகவும் உறுதியளித்தார்.

ராகுலின் கொங்குமண்டலச் சுற்றுப் பயணத்தின் போது திடீரென தேநீர் கடையில் நிறுத்தி தொண்டர்கள், நிர்வாகிகளோடு தேநீர் அருந்தியதோடு, ஜோதிமணி மாட்டு வண்டி ஓட்ட ராகுலும் அதில் அமர்ந்து பயணம் செய்த நிகழ்வும் அரங்கேறியது. இதன் ஒரு பகுதியாகவே, வில்லேஜ் குக்கிங் யூடியூப் குழுவினரின் விருந்து நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அவர்களால் பதிவேற்றப்பட்ட ராகுல் காந்தியின் சமையல் வீடியோ பல லட்சம் பார்வைகளை கடந்து மக்களை ஈர்த்து வருகிறது.