தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமை அறிவிக்கும் எனவும் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலை தொடர்பாக அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் நெருக்கும் போது மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமையிடமிருந்து அறிவிப்பு வெளியாகும்’ என கூறியுள்ளார்.







