தமிழ்நாட்டில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, நேற்று கேரளா சென்ற நிலையில், இன்று 6-வது நாள் நடைபயணத்தை அங்கு தொடர்ந்துள்ளார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மொத்தம் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணத்தை மேற்கொள்ளும் அவரது பயணம் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
பின்னர் களியக்காவிளை அருகே உள்ள தலச்சன்விளையில், கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் 4 நாட்களில் 56 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார். இங்கு நடைபயணத்தை முடித்ததும் ராகுல் காந்தி கார் மூலம் தமிழகம் – கேரள எல்லையில் உள்ள செருவாரகோணம் பகுதிக்கு சென்று இரவில் தங்கினார். அதன்பின் நேற்று காலை அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் பாறசாலை பகுதிக்கு சென்றார்.
நேற்று கேரள மாநிலத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார். அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கே.சி வேணுகோபால், சசி தரூர், உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். நடைபயணத்தின் போது சாலையோர தேனீர் கடையில் தேநீர் குடிப்பது, நெசவாளர்களடன் கலந்து பேசியது, குழந்தையை தூக்கி கொஞ்சியது, சிறுமிகளுடன் கைக்கோர்ந்து நடைபயணம் மேற்கொண்டது என ராகுல்காந்தியின் இயல்பான செயல்களுக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
பின்னர் நேற்று நெமமில் பகுதியில் 5-வது நாள் நடைபயணத்தை அவர் நிறைவு செய்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு நெமம் முதல் பட்டோம் வரையில் நடைபயணத்தை தொடங்கினார். இன்று மாலை பட்டோம் முதல் கலக்கோட்டம் வரை நடைபயணத்தை மேற்கொள்ளும் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் 19 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரம் நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-இரா.நம்பிராஜன்









