ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராடிய ராகுல் காந்தி கைது!

ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி 8 மணிநேரம் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றி தனித்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர், ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். அதேபோல, மும்பையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, நேற்று இந்தியா கூட்டணி அணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் வரை பேரணியாகச் சென்றனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், சு.வெங்கடேசன், துரைவைக்கோ உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்துகொண்டனர். பேரணியாகச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேரிகார்டு மீது ஏறி ஞானேஷ்குமார் பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பினார். இதனைத்தொடர்ந்து தடுப்புகளை தாண்டிச்சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்களை போலீசார் கைது செய்து சிறிது நேரத்தி விடுவித்தனர்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கடசித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் டெல்லி ஆகாச வாணிபவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று இரவு வரை தொடர்ந்தது. தொடர்ந்து 8 மணி நேர தர்ணாவிற்கு பிறகு டெல்லில் போலீசார் ராகுல் காந்தியை வலுகட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அவருடன் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், அம்ரேந்தர் சிங் ராஜா உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஜனநாயகத் துரோகிகளைக் காப்பாற்றுவதற்காக, ஜனநாயகத்தின் எஞ்சியிருக்கும் கண்ணியமும் சேற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது; இதற்கான கணக்குத் தீர்க்கப்படும்; துரோகி ஒருத்தர் கூட தப்ப மாட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி முற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் வர காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.