ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் – அரண்மனையில் குவியும் ராஜகுடும்பத்து உறவினர்கள்

இங்கிலாந்தில் உள்ள 2-ம் எலிசபெத் ராணியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.    பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் உடல்நலம்…

இங்கிலாந்தில் உள்ள 2-ம் எலிசபெத் ராணியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. நேற்று, புதன் கிழமை மூத்த அரசியல்வாதிகளுடன் ராணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால், கூட்டத்தை ரத்து செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி இருந்தனர். இதையடுத்து, அவரது கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

 

இதற்கு முந்தையநாள் பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ்சையும் சந்தித்து இருந்தார். இந்நிலையில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் ராணி தற்போது தங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் இதற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது, இதுபோன்று அரண்மனை அறிக்கை வெளியிட்டது இல்லை. இன்றைய அரண்மனை அறிக்கை இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் மற்றும் நாடாளுமன்றத்தின் மூத்த அரசியல்வாதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, எலிசபெத் ராணி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால்  ஸ்காட்லாந்தில் இருக்கும் பல்மோரல் அரண்மனைக்கு இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம் இருவரும் விரைந்துள்ளனர். மேலும் ராணியின் ராஜ குடும்பத்து உறவினர்களும் அரண்மனைக்கு வந்த வண்ணம் உள்ளனர் .

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.