முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

கால்பந்து உலகக் கோப்பை: வெல்ல வாய்ப்புள்ள அணி எது?

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒற்றைக்கனவான உலகக்கோப்பையை வெல்வதே ஒவ்வொரு வீரரின் வாழ்க்கை லட்சியாகமாவே இருக்கும்… பலமுறை கோப்பையை வென்ற அணிகள்… வெல்ல துடிக்கும் அணிகள்… என கத்தாரில் கோதாவில் இறங்கும் படைகளில் எந்த படைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்…

கால்பந்து உலகக்கோப்பை என்றாலே நினைவுக்கு வருவது பிரேசில் தான்… 1958, 62, 70, 94, 2002 என 5 முறை கோப்பையை உச்சி முகர்ந்த பிரேசில் அணியே அதிகமுறை பட்டம் வென்ற அணியாகும்… 2014ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் சொந்த மண்ணில் படுதோல்வியை தழுவியது பிரேசில்… 2018ஆம் ஆண்டும் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது…. தங்கள் மீதான விமர்சனங்களை துடைத்தெறிய கிடைத்த சரியான வாய்ப்பாக இந்த உலகக்கோப்பையை எண்ணுகிறது அந்த அணி… அதற்கேற்றாற்போல், மிக வலுவான அணியுடன் களம் காணும் பிரேசில், நம்பிக்கை நாயகன் நெய்மரின் உதவியோடு, 6வது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது….  உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக கருதப்படும் மெஸ்ஸி தலைமையில் களமிறங்குகிறது அர்ஜெண்டினா அணி… 36 ஆண்டுகளுக்கு முன்பு மரடோனா தலைமையில் கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவுக்கு அதன் பிறகு உலகக்கோப்பை என்பதே எட்டாக்கனியாக உள்ளது… ஆனால், இந்த முறை புது உத்வேகத்துடன் களம் காணும் அர்ஜெண்டினா, தொடர்ந்து 36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது…. சமீபத்தில், பிரேசில் அணியை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா தொடரைக் கைப்பற்றியதே அர்ஜெண்டினா அணியின் திறனுக்கு சான்று… மெஸ்ஸிக்கும் இதுவே இறுதி உலகக்கோப்பை என்பதால், அந்த அணியின் கோப்பை தாகம் தணியும் என்பதே ரசிகர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு….

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும் வலுவாகவே உள்ளது… சிறந்த வீரர்களுள் ஒருவராக உள்ள இளம் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே, பலோன் டோர் (ballon d’or)) விருதை வென்ற கரிம் பென்ஸிமா, உஸ்மான் கிரீஸ்மன், வரேன் போன்ற வீரர்களை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது… கடந்த முறை கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற காண்டே, போக்பா போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவு… மிட் பீல்டில் இளம் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் பட்சத்தில் தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வெல்வதும் சாத்தியமே…
கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த இளம் வீரர்களுக்கான விருதுகளை வென்ற பெட்ரி, GAVI ((கேவி )) போன்ற வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் அணி இந்த முறை வலுவாக களத்தில் நிற்கிறது. புஸ்கெட்ஸ், ஜோர்டி ஆல்பா போன்ற மூத்த வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தால்… கடந்த உலகக்கோப்பைகளில் கண்ட ஏமாற்றத்தை ஸ்பெயின் அணி துடைத்தெறியும் என நம்பலாம்…

இந்த தொடரில் இளம் பட்டாளத்தைக் கொண்டு ஒரு அணி என்றால் அது இங்கிலாந்து தான்… கடந்த ஆண்டு நடந்து முடிந்த யூரோவில் இறுதிப்போட்டி வரை சென்று போராடி வீழ்ந்த இளம் படை, இந்த முறை தடத்தை பதிக்க காத்திருக்கிறது… ஹாரி கேன், ஸ்டெர்லிங், பெல்லிங்காம், சாக்கா, ஃபிலிப் ஃபோடன், அலெக்ஸாண்டர் அர்னால்டு என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கொண்டுள்ளது இங்கிலாந்து… 56 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வெல்லும் ஏக்கத்தையும் இந்த அணி தீர்க்கும் என்பதே வல்லுநர்களின் கருத்து…

இந்த 5 அணிகள் தவிர்த்து, ஃபிஃபா தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள பெல்ஜியம், 2014ல் கோப்பையை வென்ற ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாகவே கருதப்படுகின்றன.. குறிப்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் போர்ச்சுகல் அணி, சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், உலகக்கோப்பை என்றால் ஒரு கை பார்ப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு

EZHILARASAN D

குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்

Halley Karthik

இம்மாத கடைசியில் 36 செயற்கை கோள்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ

G SaravanaKumar