மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் என தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்து தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் மூலம் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக உரையாடலை தொடங்கி வைத்தவர், கர்ணனில் அதை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் தொடங்கியுள்ளது. படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பினை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தினை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், நேவி ஸ்டூடியோ வழங்க, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது மனைவி திவ்யாவுடன் இணைந்து தயாரிக்கிறார். படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோருடன் நான்கு சிறுவர்கள் நடிக்கிறார்கள். 1994 ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு அமைய உள்ளதாக கூறப்படுகிறது.







