கால்பந்து உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணியும், நெதர்லாந்து-செனகல் அணிகளும் மோதுகின்றன.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சேம்பியனான இங்கிலாந்து இன்றைய ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
இதில் இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன. தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் கைதேர்ந்த நெதர்லாந்து அணி 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறதே தவிர இதுவரை கோப்பையை வென்றதில்லை. தனது கடைசி 15 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நெதர்லாந்து அதே உத்வேகத்துடன் களம் காண காத்திருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்தல் கடைசி நேரத்தில் சாடியோ மனே விலகியது செனகலுக்கு பெரும் சறுக்கலாகும். இவர் தான் செனகல் அணிக்காக அதிகமாக 34 கோல்கள் அடித்தவர் ஆவார்.







