சங்கர க்ருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒருகோடி ரூபாய் நிதி வழங்கினார்.
காஞ்சி சங்கர மடத்தின் மறைந்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 87வது ஜெயந்திவிழா காஞ்சிபுரத்தில் உள்ள மகா பெரியவா மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காணொளிக் காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பழங்கால கோயில்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
பின்னர் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தலைமையின் கீழ் காஞ்சி மடம் மிகப்பெரிய உயரத்தை எட்டியதாகவும் ஆன்மிகம் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றிலும் காஞ்சி மடம் சேவை செய்து வருவதாக புகழாரம் சூட்டினார். மேலும் சங்கர க்ருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு ஆளுநர் நிதியில் இருந்து ரூ. ஒரு கோடிக்கான காசோலையை விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் அவர் வழங்கினார்.







