ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர்…

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். சாது சிங் முன்னாள் முதல்வர்  அமீந்தர் சிங் அமைச்சரவையில் வனம் மற்றும் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தார். அவருடன் உதவியாளராகப் பணியாற்றிய உள்ளூர் பத்திரிகையாளர் கமல்ஜித் சிங்கும் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர் சாது சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எச்சரித்து வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த வாரம் வன அதிகாரி குர்னாம்ப்ரீத் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஹம்மி ஆகியோரை ஊழல் புகாரின்பேரில் போலீஸார் கைது செய்தனர். அப்போது, சாது சிங்குக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சேகரித்தனர். ஹர்மிந்தர் சிங் ஹம்மி சாது சிங்கிற்கு அதிக அளவிலான லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கேப்டன் அமரீந்தர் பதவியில் இருந்தபோது, ​​ஐஏஎஸ் அதிகாரியான கிர்பா சங்கர் சரோஜ் என்பவரால் உதவித்தொகை மோசடியில் சாது சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவருக்கு “க்ளீன் சிட்” எனும் குற்றத்தில் சந்தேகப்படும் நபர்களுக்கு சட்ட அமலாக்க முகமைகளால் வழங்கப்படும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும், வனம் மற்றும் சமூக நலத் துறைகளில் அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி ஈஸ்வர் சிங்கை நீக்கிவிட்டு மற்றொரு அதிகாரியான ஏடிஜிபி வெரிந்தர் குமாரை தலைமை இயக்குநராக முதல்வர் நியமித்தார். நியமிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெரிந்தர் குமார், அமரீந்தர் சிங்கின் ஆட்சிக் காலத்தில் மாநில உளவுத் துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மேலும், அப்போது எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல்களின் ஆவணத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ​​அந்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் முதல்வர் பகவந்த் மான் செயல்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.