புனித் ராஜ்குமாரிடமிருந்து தானமாக பெறப்பட்ட இரண்டு கண்கள் மூலம் , 4 பேருக்கு பார்வை கிடைத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது இரு கண்களும் தானமாக அளிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் நேற்று காலை கண்டீரா ஸ்டுடியோவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தானமாக பெறப்பட்ட அவரது இரு கண்களில் இருந்து எடுக்கப்பட்ட கருவிழிகளை இரு துண்டுகளாக்கி, 4 பேருக்குப் பொருத்தி கண்பார்வை அளித்துள்ளதாக பெங்களூருவில் உள்ள நாராயணா நேத்ராலயா மருத்துவமனை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை நிர்வாகி புஜங் ஷெட்டி, நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை கவுரவப்படுத்தும் வகையில், இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டதாகக் கூறினார். மேலும், புனித் கண்களின் வெள்ளைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட லிம்பெல் செல்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு தீக்காயம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் புஜங் ஷெட்டி தெரிவித்தார்.








