டி20 உலகக் கோப்பை தொடரில், நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும் ஜாஸ் பட்லரும் களமிறங்கினர். இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ராய் 9 ரன்னிலும் டேவிட் மலான் 6 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்கமாலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய ஜாஸ் பட்லர், இலங்கையின் பந்துவீச்சை கருணையின்றி கபளீகரம் செய்தார்.
இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து சதத்தைப் பதிவு செய்தார். அவர் 67 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினார். இந்த தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இது. கேப்டன் மோர்கன் தன் பங்குக்கு 40 ரன்கள் சேர்த்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் டி சில்வா 3 விக்கெட்டுகளையும் சமீரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து 19 ஒவர்களிலேயே 137 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியின் வனிந்து ஹசரங்கா டி சில்வா அதிகப்பட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 4 வது வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, அடில் ரஷீத், ஜோர்டான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.









