சசிகலா அழைத்தால் அவரை நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அண்மையில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை இன்று அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி, தன்னுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அப்பாவு, தற்போது சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார் எனவும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதனை மீட்டெடுப்பது கடினம் எனவும் புகழேந்தி தெரிவித்தார். மேலும், சசிகலா அழைத்தால் அவரை நேரில் சந்திக்க தயாராக இருப்பதாக கூறிய அவர், அதிமுகவை மீட்டெடுக்க சசிகலாவால்தான் முடியும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய புகழேந்தி, டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மக்கள் பிரச்னைகளுக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், திராவிட இயக்க சிந்தனையில் தன்னுடைய செயல்பாடு இருக்கும் எனவும், தனது முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.