ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியா?: ஆதரவாளர் விளக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியிடுமா என்பது குறித்து அந்த அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற…

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியிடுமா என்பது குறித்து அந்த அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்கிற விவாதம் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக உட்கட்சி பிரச்சனை நிலவும் அதிமுக இந்த தேர்தலை எப்படி கையாளப்போகிறது என்பது ஆர்வத்துடன் உற்றுநோக்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமாகா ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்கியது. இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா,  தமாகா வேட்பாளர் யுவராஜாவைவிட 8,904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில்  கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தமாகாவிற்கு  வரும் இடைத்தேர்தலில் போட்டியிட இபிஎஸ் அணி வாய்ப்பு வழங்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதே நேரம் தாம்தான் தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் முடிவு என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியின்  கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி,  கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமாகா 6 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை எனத் தெரிவித்தார். இந்நிலையில் மீண்டும் அக்கட்சியிடம் ஈரோடு கிழக்கு தொகுதியை ஒப்படைத்துவிட்டு இடைத் தேர்தலிலிருந்து தப்பிக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக புகழேந்தி கூறினார். கொங்கு மண்டலத்தில் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக்  கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த இடைத் தேர்தல் ஒரு சவால் எனவும் புகழேந்தி தெரிவித்தார்.

தங்கள் ஆயுதம் பணமில்லை ஆனால் தங்களின் ஆயுதம் ஓபிஎஸ் மட்டுமே என்று தெரிவித்த புகழேந்தி,  ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அதேநேரம் ஒபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக  காத்திருப்பதாவும் புகழேந்தி தெரிவித்தார். இரட்டை இலைக்கு சொந்தக்காரர் ஓபிஎஸ் தான் எனக் கூறிய புகழேந்தி,   ஓபிஎஸ் உடன் பேசி தான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

-எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.