புதுச்சேரி மின்துறை தனியார்மயமாகவில்லை – அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்!

எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் மின்துறை வழங்கப்படவில்லை என புதுச்சேரி மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதாக எழுந்த சர்ச்சைக்கு புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் மின்துறை வழங்கப்படவில்லை என்றும், இது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மின்துறை இன்னும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் எதுவும் கோரப்படவில்லை. மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அரசு எந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும் மின்துறையை வழங்க முடியாது.

அதானி குழுமம் வெளியிட்ட அறிவிப்பு, மின்துறைக்காக அல்லாமல், சூரிய மின்சக்தி (Solar Power) போன்ற வேறு ஏதேனும் ஒரு திட்டத்திற்காக இருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். மின்துறை என்ற பெயரைப் பயன்படுத்தியதற்காக அதானி குழுமத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததாகவும், இது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரி மின்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையில், மின்துறை தொடர்பான அனைத்து முடிவுகளும் அரசின் வழிகாட்டுதலின்படியே எடுக்கப்படும். எந்தவொரு முக்கிய முடிவும் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்த விளக்கத்தின் மூலம், புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கப்படுவது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.