புதுச்சேரியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் ஏனாம் தொகுதியில் காணாமல் போன சுயேச்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மாடி கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் சுயேச்சையாக துர்கா பிரசாத் பெம்மாடி என்பவர் போட்டியிடுகிறார். இவரை கடந்த ஒன்றாம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி பொத்தபத்துலா சாந்தி ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஏனாம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றிரவு கோதாவரி ஆற்றுப்படுகை அருகே மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மயங்கிய நிலையில் உள்ளதால் அவர் எப்படி காணாமல்போனார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டாரா அல்லது யாரேனும் அடித்து அங்கேயே விட்டு விட்டு சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







