புதுச்சேரியில் நகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு மணி நேரமாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் குளிர்சாதன வசதியுடன் அதிநவீன மீன் விற்பனை செய்யும் அங்காடி கட்டப்பட்டுள்ளது. இதனிடையே நகரின் மையப்பகுதியான குபேர் அங்காடியில் மீன் மொத்த விற்பனை செய்வோரை நவீன மீன் அங்காடிக்கு செல்ல புதுச்சேரி நகராட்சியினர் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு கடற்கரையோரப்பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு மீண்டும் குபேர் அங்காடி மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூறி நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று அங்காடிக்கு வந்த மீன் லாரிகளை அதிகாரிகள் தடுத்துநிறுத்தினர்.
இதற்கு எதிர்த்து தெரிவித்து நேரு சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மீன்களை கொட்டி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.







