சூடுபிடிக்கும் தேர்தல் களம்; அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல்

அமைச்சர் ஜெயக்குமார், சீமான், கமல் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில்…

அமைச்சர் ஜெயக்குமார், சீமான், கமல் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலை அதிமுக கூட்டணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், திமுக கூட்டணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், அமமுக கூட்டணி டிடிவி தினகரன் தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணி கமல்ஹாசன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையிலும் களம் காண்கிறது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல், ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் கோட்டாடசியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.