விருதுநகர் பட்டம்புதூரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளது.
கருணாநிதி அளவுக்கு தன் கட்சித் தொண்டர்களுடன் இணக்கமாக இருந்த தலைவர்கள் என்று எடுத்துக்கொண்டால் யாருமே இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் மிகச் சிலரே இருக்க முடியும். தொண்டர்களை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் நாளேடான முரசொலியில் தாம் எழுதும் மடல்கள் மூலம் அவர்களுடன் நெருக்கமான உறவை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டவர். கருணாநிதியின் முரசொலி கடிதங்கள், ஒவ்வொரு தொண்டனிடமும் தனித்தனியே உரையாடுவதுபோன்ற எளிய நடையில் அழகு தமிழில் இடம்பெற்றிருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சர்ச்சைக்குரிய மற்றும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் கருணாநிதி என்ன நினைக்கிறார், தொண்டர்கள் அந்தப் பிரச்னையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தன் கடிதங்கள் மூலமாக அறிவுறுத்துவார். இதுபோன்ற நெருக்கத்தால், கட்சித் தொண்டர்களுக்கு அவர் மிகப்பெரிய வழிகாட்டியாக விளங்கினார் என்றே கூற வேண்டும். இதுவரை ஆயிரக்கணக்கான கடிதங்களை முரசொலி நாளேட்டில் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் `நண்பனுக்கு…’ என்று முரசொலி கடிதத்தைத் தொடங்கியவர் பின்னர், `உடன்பிறப்பே…’ என்று தொடங்கி எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டார். கருணாநிதியின் கோபம், விமர்சனம், பாராட்டு, எதிர்ப்பு என எதுவானாலும் ஓசைநயத்துடன், அதே சமயம் எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் வார்த்தைகள் அந்தக் கடிதங்களில் இடம்பெறும். அவரின் கடிதத்தை வாசிப்பதற்காகவே முரசொலியை வாங்கிப் படிப்பவர்கள் அதிகம் உண்டு.
இந்நிலையில், கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. விருதுநகர் பட்டம்புதூரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், இந்த நூலை திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொள்கிறார். 1968 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில், திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை படிப்பகத்தின் உரிமையாளர் கௌரா ராஜசேகரன் பதிப்பித்துள்ளார்.
21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்துக் கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியாகின்றன.
-ம.பவித்ரா