சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னை கோட்டையை நோக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விரைவில் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் சேலத்தில் தெரிவித்தார்.
சேலம் மெய்யனூர் சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், ‘ஒன்றிய
அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்’ என்ற தலைப்பில் விளக்கவுரை பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளக்க உரை ஆற்றிய வேல்முருகன், தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயனடையும் வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்தபோதிலும் நம் மண்ணிற்கான
உரிமைகளை கேட்க ஒருபோதும் அச்சப்படமாட்டோம். மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் கூறியது போல மதுபானக் கடைகளை படிப்படியாக மூட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தினால் கூட்டணியிலிருந்து குதர்க்கமாக பேசுகிறேன்
என்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்; அவ்வப்போது மக்கள் பிரச்னைகளை நினைவுபடுத்தும் வேலையை கூட்டணியிலிருந்து செய்வேன். தோழமை சுட்டுதலாக கூறுகிறேன். ஆட்சியாளரகளிடமிருந்து என்னைப் பிரிக்க சங்பரிவார் சூழ்ச்சி செய்கின்றனர் தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து வந்த ஆளுநரே காரணம்.
எட்டுவழிச் சாலை விவகாரத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஏன் தடுமாற்றம் இருக்கிறது? எட்டுவழிச் சாலைகளை எங்களோடு சேர்த்து திமுக எதிர்க்க வேண்டும். கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக கணியாமூர் பள்ளி மாணவி விவகாரத்தை கடந்து போய்விடவில்லை. அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் பதவி பெற ஒதுக்கீடு வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தமிழர்கள் பதவி பெற ஒதுக்கீடு வேண்டும். பெல் நிறுவனத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில், தவாக மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-ம.பவித்ரா







