கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 2 காட்டுயானைகள்!

கூடலூர் ஓவேலி அருகே உள்ள பெரிய சோலை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த இருகாட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டதோடு, குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை…

கூடலூர் ஓவேலி அருகே உள்ள பெரிய சோலை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த இருகாட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டதோடு, குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள ஓவேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் பலாப்பழத்தை ருசி பார்க்க ஓவேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதேபோல் ஓவேலி பகுதியில் அமைந்துள்ள பெரிய சோலை கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரு காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்தின் வழியாக குடியிருப்புப் பகுதியில் நுழைந்தன. இதனை அறிந்த கிராம மக்கள் உடனடியாக குடியிருப்பு பகுதியில் நுழைந்த இரு காட்டு யானைகளைச் சத்தமிட்டு கிராமப் பகுதியில் இருந்து விரட்டினர்.
பெரிய சோலை கிராமப் பகுதிகளில் தற்போது பகல் நேரங்களிலேயே குடியிருப்புகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுவதால், இதனை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பு பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.